விரைவுச்சாலை திட்டத்தில் ரூ.6,758 கோடி ஊழல் பாஜவினர் திருவிழா திருடர்கள்: முத்தரசன் கடும் தாக்கு

சேலம்: டெல்லி-குருகிராம் விரைவுச்சாலை திட்டத்தில் ரூ.6,758 கோடி ஊழல் செய்துள்ள பாஜவினர், திருவிழா கூட்டத் திருடர்கள் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழு கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று தொடங்கியது. வரும் 17ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கும் கூட்டத்தை கட்சி கொடியேற்றி, மாநில செயலாளர் முத்தரசன் துவக்கி வைத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: டெல்லியில் இருந்து அரியானா மாநிலம் குருகிராமிற்கு சாலை அமைப்பதில், ரூ.6,758 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் குறித்து பிரதமர் மோடி பகிரங்கமாக பேச வேண்டும். துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்து விட்டு, மற்ற கட்சிகளின் முறைகேடு பற்றி பிரதமர் பேசட்டும். பாஜவினரை பொருத்தவரை அவர்கள் திருவிழா கூட்ட திருடர்கள்.

அதாவது, திருவிழாவின் போது திருடும் நபர், திருடன், திருடன் எனக் கூறிக்கொண்டே ஓட்டம் பிடிப்பார். அதுபோலவே, பாஜவினர் செயல்படுகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் தனி அரசியல் செய்து, ஆளுநர் மாளிகையை பாஜ அலுவலகமாக மாற்றி வருகிறார். எக்காரணத்தை கொண்டும் நீட் விலக்கிற்கு கையெழுத்து போட மாட்டேன் என கூறி இருக்கிறார். தனியார் நீட் கோச்சிங் சென்டர்கள், மாணவர்களிடம் பல லட்சம் கொள்ளை அடிக்கிறது.
ஆளுநருக்கு சில தனியார் கோச்சிங் சென்டர்கள் பினாமியாக இருப்பதாக சொல்கிறார்கள். அண்ணாமலை செல்வது பாத யாத்திரை அல்ல. பாதியில் நின்று போன யாத்திரை. இதனால் அவர்களின் கட்சிக்கோ, மக்களுக்கோ எந்த பலனுமில்லை. வேண்டுமென்றால் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று, அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என அவர் பாதயாத்திரை நடத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

The post விரைவுச்சாலை திட்டத்தில் ரூ.6,758 கோடி ஊழல் பாஜவினர் திருவிழா திருடர்கள்: முத்தரசன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: