ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பஸ் நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 32 கிமீ., தொலைவில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் பைக்காரா படகு இல்லம், பைக்காரா அணை மற்றும் பைக்காரா அருவி, நடுவட்டத்தில் சீன கைதிகள் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர் கால சிறைச்சாலை என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

இதுதவிர தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டம் உள்பட தனியார் எஸ்டேட்டுகள் உள்ளது. கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடலூர், நடுவட்டம் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதுதவிர கூடலூரில் இருந்து நடுவட்டம் வழியாக ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், சென்னை, கன்னியாகுமரி உள்பட பல ஊர்களுக்கு அரசு பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து நடுவட்டம் வரை செங்குத்தான மலைப்பாதை என்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. இதனால் நடுவட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படுகிறது.

தமிழக அரசு பஸ்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவில் இருந்து வர கூடிய பஸ்களும் நிறுத்தி செல்கின்றன. ஆனால் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி கிடையாது. பஸ் நிலையத்தின் மேற்கூரைகள் மிகவும் பழுதடைந்து மழை காலத்தில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உடனடியாக பணிகள் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக பஸ் நிலைய கட்டிடம் மற்றும் வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா முழுவதுமாக குறைந்த பின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டது.

அவ்வபோது மழை உள்ளிட்ட காரணங்களால் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. பஸ் நிலைய வளாகத்தில் 10 கடைகள் கட்டப்பட்டுள்ளன. நடுவட்டம் பஸ் நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், நடுவட்டம் பஸ் நிலைய கட்டுமான பணிகள் ரூ.3 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயராக உள்ளது. இம்மாத இறுதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவிற்கு பின் கடைகள் டெண்டர் விடப்படும். இதேபால் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்ட பஸ் நிலையம், கூடலூர் பஸ் நிலையம் ஆகியவையும் திறக்கப்பட உள்ளது, என்றனர்.

The post ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பஸ் நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: