370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் 4-ம் ஆண்டு நிறைவு தினம்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி வீட்டு சிறையில் அடைப்பு

ஜம்மு-காஷ்மீர்: 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் 4-ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ஒன்றிய அரசு நீக்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2-ம் தேதி முதல் தினம்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் 4-ம் ஆண்டு நிறைவு தினம் இன்று கடைபிடிக்கும் நிலையில் காஷ்மீரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலரும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில்; நள்ளிரவில் இருந்து வீட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை போன்று தமது கட்சி நிர்வாகிகள் பலரும் காவல் நிலையங்களில் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்த பதில் பொய் என்றும் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

The post 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் 4-ம் ஆண்டு நிறைவு தினம்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி வீட்டு சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: