தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நாளை காலை தங்க தேரோட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்து வரும் பனிமயமாதா பேராலய திருவிழாவில் அன்னையின் திருவுருவ பவனி இன்று மாலை நடக்கிறது. இதுபோல் நாளை காலை பனி மய அன்னையின் தங்க தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.தூத்துக்குடியில் உள்ள உலகபிரசித்தி பெற்ற திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா எனப்படும் பனிமயமாதா பேராலயத்தின் 441வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.கத்தோலிக்க மறைமாவட்ட நூற்றாண்டை முன்னிட்டு 16வது தங்க தேர் இந்த ஆண்டு நடப்பது குறிப்பிடத்தக்கது. பனி மய அன்னையின் தங்க தேரோட்டம் நாளை காலை 7 மணிக்கு துவங்குகிறது.

இதனிடையே திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், செபமாலை, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடந்து வரும் நிலையில் 9ம் நாள் திருநாளையொட்டி நேற்று (3ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடந்தது. 6.30 மணிக்கு புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் துவக்கப்பள்ளி, மனையியல் கல்லூரி, புனித சார்லஸ் பள்ளி மாணாக்கர்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 7.30 மணிக்கு புனித யூதாதயேயு ஆலய பங்கு இறைமக்கள், கப்புசின் சபை துறவியர், திரு இருதய சபை அருட்சகோதரிகள், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கான திருப்பலி நடந்தது. 8.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பல்கு மக்களுக்கான திருப்பலி நடந்தது.

காலை 9.30 புதுக்கோட்டை, அந்தோனியார்புரம் பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 11 மணிக்கு ரீத்தம்மாள்புரம் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. மாலை 4 மணிக்கு ஏழு கடல்துறை, கடலோர பங்குகளுக்கான திருப்பலி இலங்கை மன்னார் ஆயர் இமானுவேல் பர்னாண்டோ தலைமையில் நடந்தது. 5.30க்கு ஆசீருக்கான திருப்பலி பங்கு தந்தை ஜேம்ஸ் விக்டர் தலைமையில் நடந்தது. மாலை 7.15 ஆயர் இமானுவேல் பர்னாண்டோ தலைமையில் செபமாலை, நற்கருணை ஆசீர் நடந்தது. இரவு திருச்சி பனித பவுல் குருத்துவகல்லூரி முதல்வர் ஆண்ட்ரு டி ரோஸ் அன்னை மரியா படைப்பின் அரசி என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலி மற்றும் நிகழ்ச்சிகளில் ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா, பங்குத்தந்தை ஜேம்ஸ்விக்டர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று (4ம்தேதி) மாலை 6.30 மணிக்கு கோவை உயர்மறை மாவட்ட பிஷப் கர்தினால் பிலிப் நேரி தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. விழாவின் சிகரமாக நாளை (5ம்தேதி) அதிகாலை 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், 7 மணிக்கு கோவா உயர் மறைமாவட்ட பிஷப் கர்தினால் பிலிப்நேரி தலைமையில் தங்கத் தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

தொடர்ந்து கோவை பிஷப் தாமஸ் அக்வினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இமானுவேல் பர்னான்டோ ஆகியோர் அர்ச்சிப்பு செய்ய அன்னையின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு இலங்கை மன்னார் பிஷப் இமானுவேல் பர்னான்டோ தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

The post தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நாளை காலை தங்க தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: