வைகை அணை சாலை சந்திப்பில் கோட்டப்பொறியாளர் ஆய்வு

 

ஆண்டிபட்டி, ஆக. 4: ஆண்டிபட்டி வைகை அணை சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு கோட்டப்பொறியாளர் சாலை விபத்தை குறைக்கவும், போக்குவரத்து தங்கு தடையின்றி செல்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராம நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் சந்திப்பில் விபத்து ஏற்படும் பகுதி, குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளை தேர்வு செய்து, விபத்தை குறைக்கவும், போக்குவரத்து தங்கு தடையின்றி செல்லவும் வழிவகை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் ஆண்டிபட்டி நகரில் வைகை அணை சாலை சந்திப்பில் ஏற்படும் சாலை விபத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தடுக்கவும் போதுமான வழிவகைகளை செய்திட நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் (சாலை பாதுகாப்பு அலகு) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோட்டப்பொறியாளர் வரலட்சுமி தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், சாந்தினி ஆகியோர் முன்னிலையில் வைகை அணை சாலை சந்திப்பில் சாலையை அகலப்படுத்துவது குறித்தும், விபத்து ஏற்படாத வகையில் எச்சரிக்கை விளக்குகள், வழிகாட்டி பாததைகள் ஆகியவை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும் இந்த ஆய்வில் உதவி பொறியாளர் முருகேஸ்வரன், காவியமீனா நெடுஞ்சாலைத் துறை மற்றும் (சாலை பாதுகாப்பு அலகு) அதிகாரிகளும் சாலை பணியாளர்களும் உடன் இருந்தனர்.

The post வைகை அணை சாலை சந்திப்பில் கோட்டப்பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: