தேனி தொகுதியில் வெற்றி செல்லாது ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது, தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முன்னதாக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது வருமானம் உள்ளிட்ட உண்மை விபரங்களை மறைத்ததாகவும், எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதே சட்டவிரோதம் எனவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. அதில், விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்ததாக வேட்புமனுவில் கூறிய நிலையில், வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளம், வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பது ஆகியவற்றை ரவீந்திரநாத் மறைத்துள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் 4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து மட்டுமே வேட்பு மனுவில் காட்டியிருக்கிறார்.

இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பணப்பட்டுவாடா மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதிய ஆதாரம் இல்லாததால், அந்த குற்றவழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தேனி தொகுதியில் வெற்றி செல்லாது ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: