நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை: நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது. நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, இதுவரை அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப் படாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் 19,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் “ நிலம் எடுப்பு செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன” என்று கூறி உள்ளார். ஆனால் எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றால், 2013 ஆம் ஆண்டு புதிய நிலமெடுப்புச் சட்டப்படி அந்த நிலத்தை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை கடலூர் மாவட்ட ஆட்சியர் உணரவில்லையா? 10 ஆண்டுகள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா?

நிலம் எடுப்பில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதில் மிகக் கடுமையான பாரபட்சம் நடந்திருக்கிறது. சட்டப்படி இழப்பீடு நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு மறுவாழ்வு – மறுகுடியமர்வு பணிகளை முறையாக செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நெய்வேலியில் பொது மக்கள் போராட்டத்தின் போது காவல் துறை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்: வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: