தூக்க மாத்திரை கொடுத்து தலையணையால் அழுத்தி காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று தூக்கிலிட்ட ஆசிரியை: திடுக் வாக்குமூலம்

ஜலகண்டாபுரம்: கணவனுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தலையணையால் அழுத்திக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட ஆசிரியை, அவரது காதலன், தோழியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (32), தறித்தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (27). 7 வயதில் மகன் உள்ளான். கடந்த 5 ஆண்டுக்கு முன் பெங்களூருவில் வேலை பார்த்த சுந்தர்ராஜ், அல்சர் பிரச்னையால் திரும்பி வந்து சொந்த ஊரிலேயே தறித்தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சுந்தர்ராஜ் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் தற்கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில், தூக்கில் தொங்கியது போல் கழுத்து இறுகாமல், மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து சுந்தர்ராஜின் மனைவி நிவேதாவை சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்தனர். அதில் அவர், கடந்த 4 மாதமாக ஆவடத்தூர் அருகே கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த தினேஷ் (24) என்பவருடன் செல்போனில் அதிக நேரம் பேசியது தெரியவந்தது. அவரையும் பிடித்து வந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சுந்தர்ராஜை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். இதற்கு நிவேதாவின் பள்ளி தோழி வித்யா (27)வும் உதவியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: பெங்களூருவில் இருந்து சுந்தர்ராஜ் சொந்த ஊருக்கு வந்ததும் நிவேதா அங்குள்ள தனியார் பள்ளிக்கு ஆசிரியை வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி தோழி வித்யாவுடன் பேசியுள்ளார். அவர் மூலம் தினேஷ் அறிமுகமாகியுள்ளார். பின்னர், நிவேதாவும், தினேசும் போனில் பேசி நெருக்கமாகியுள்ளனர். இதனை அறிந்த சுந்தர்ராஜ், மனைவி நிவேதாவை கண்டித்துள்ளார். போனையும் பறித்துக் கொண்டுள்ளார். தகாத உறவு கணவனுக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து நிவேதா திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில், ஆடி 1க்கு மாமனார், மாமியார் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதை பயன்படுத்தி நிவேதா, 17ம் தேதி இரவு காதலன் தினேசை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். முன்னதாக சுந்தர்ராஜுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்துள்ளார். காதலன் வந்ததும், சுந்தர்ராஜின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்தது போல் தூக்கில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு மாமானாருக்கு போன் செய்து சுந்தர்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post தூக்க மாத்திரை கொடுத்து தலையணையால் அழுத்தி காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று தூக்கிலிட்ட ஆசிரியை: திடுக் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: