2வது சுரங்க விரிவாக்க பணிக்காக வயலில் பள்ளம் ேதாண்டிய என்எல்சி: சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, டயர் எரிப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கத்துக்காக வயல்களில் 35 பொக்லைன் இயந்திரங்களை இறக்கி பள்ளம் தோண்டப்பட்டது. இதை எதிர்த்து பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே புதிய பரவனாற்றில் வாய்க்கால் தோண்டி சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக சுமார் 35 பொக்லைன் இயந்திரங்கள் வயல்வெளிகளில் இறக்கி பள்ளம் தோண்டப்பட்டது.

வளையமாதேவியில் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்களை பொக்லைனை இறக்கி சேதப்படுத்தியதால் விவசாயிகள் கொதிப்படைந்தனர். இதை கண்டித்தும், சமகால இழப்பீடு, நிரந்தர வேலைவாய்ப்பு கோரியும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் ஏற்பட்டதால், அங்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், விழுப்புரம் மாவட்ட எஸ்பி சஷாங்சாய், கடலூர் எஸ்பி ராஜாராமன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதி, விருத்தாசலம் பேருந்து நிலைய பகுதியில் பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி, காடாம்புலியூர் மெயின் ரோட்டில் தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்ற அரசு விரைவு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது. இதையடுத்து காடாம்புலியூர் போலீசார் விரைந்து வந்து பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். நெய்வேலி கண்ணுதோப்பு பாலம் அருகே மர்ம நபர்கள் சாலையில் டயர்களை தீ வைத்து எரித்தனர். மேலும் அச்சாலை வழியாக கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மீது கல் வீசப்பட்டதில் முன் பக்க கண்ணாடி நொறுங்கியது.

* இழப்பீடை பெற்றுக்கொண்டும் நிலத்தை ஒப்படைக்கவில்லை: கலெக்டர் விளக்கம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், வளையமாதேவி கீழ்பாதி, மேல்பாதி மற்றும் 4 கிராமங்களில் அமைந்துள்ள பரவனாற்றில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பணிக்காக பரவனாறு மாற்று பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக என்எல்சி 6 கிராமங்களில் 46 தொகுதிகளில் 304 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் என்எல்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஹெக்டர் நிலங்கள் தீர்வாணை பிறப்பிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்ததால் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட பின்னரும் நிலத்தை ஒப்படைக்காமல் தொடர்ந்து விவசாயப் பணிகள் செய்து வருகின்றனர். இருப்பினும் நில உரிமையாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பல கட்டங்களிலும் தீர்த்து வைத்து, அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை பெற்று வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.

The post 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக வயலில் பள்ளம் ேதாண்டிய என்எல்சி: சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, டயர் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: