ஆசிரியர் குடும்பத்தில் 5 பேர் தற்கொலை சம்பவம் கந்துவட்டி கொடுமையால் காவு போனதா 5 உயிர்கள்?: வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த ஆசிரியர் தம்பதி லிங்கம் (43), பழனியம்மாள் (47) தனது மகன், மகள் மற்றும் 3 மாத பெண் குழந்தை என அனைவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், லிங்கம் 2 மாதங்களுக்கு முன்பே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் ஆசிரியர் லிங்கம், “ஆரம்ப காலத்தில் எங்களுக்கு சம்பளம் குறைவு. எனக்கு, மனைவிக்கு, பெற்றோர்களுக்கு அதிகமான மருத்துவ செலவு ஏற்பட்டது.

அப்போது வட்டிக்கு வாங்கி மருத்துவச் செலவு செய்து வந்தேன். கொரோனா காலத்தில் அதிகமாக மருத்துவச் செலவு ஏற்பட்டது. ஒவ்வொருவரிடமும் 3 லட்சம், 4 லட்சம், 10 லட்சம் என வட்டிக்கு வாங்கினேன். திருத்தங்கல், சிவகாசி பகுதியில் உள்ள சிலருக்கு வட்டி சரியாக கொடுத்த நிலையிலும் அதிக வட்டி கேட்டு மிரட்டினர். அதில் ஒருவருக்கு அசலுக்கு மேல் வட்டி கொடுத்தும் ஒழுங்கா பணத்தை கொடு, இல்லாட்டி உன் பொண்டாட்டிய அனுப்பு. பணத்தை கொடுத்துட்டு உன் பொண்டாட்டிய கூப்பிட்டுட்டு போ என மிரட்டினார். போலீசில் சென்று புகார் கொடுத்தால் எங்களுக்கு பெரிய, பெரிய ஆள் எல்லாம் பழக்கம். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுகின்றனர். வட்டி கேட்டு வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்துகின்றனர். அவர்கள் மிரட்டியது அனைத்தும் எனது ஆட்டோமேட்டிக் கால் ரிக்கார்டில் உள்ளது’’ என்று கூறுகிறார். நெஞ்சை உருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

The post ஆசிரியர் குடும்பத்தில் 5 பேர் தற்கொலை சம்பவம் கந்துவட்டி கொடுமையால் காவு போனதா 5 உயிர்கள்?: வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: