நெல்லை காங். தலைவர் மரண வாக்குமூலம் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்ப முடிவு

நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் மரணத்துக்கு முன் அனுப்பிய வாக்குமூல கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60), மர்மமான முறையில் இறந்தார். அவரது தோட்டத்தில் கடந்த 4ம் தேதி சடலம் மீட்கப்பட்டது. அவர் எழுதி வைத்திருந்திருந்த இரு மரண வாக்குமூல கடிதங்களின் மூலம் 40க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கடந்த 23ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மூத்த மகன் கருத்தையா ஜெப்ரீன், 2வது மகன் ஜோமார்ட்டின், மகள் கேத்தலின் ஆகியோர் கடந்த 25ம் தேதி நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

அவர்களிடம் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த மரண வாக்குமுல கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அரசியல் பிரமுகர்கள், கடன் கொடுத்தவர்கள், கடன் பெற்றவர்கள் ஆகியோர் சிபிசிஐடி நெல்லை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி கடந்த இரு நாட்களாக நெல்லையில் முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்டு கண்காணித்து வந்தார். சிபிசிஐடி போலீசார் இரு குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவினர் திசையன்விளை, உவரி, குட்டம் ஆகிய பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் ஜெயக்குமாரின் உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரித்த வருகின்றனர்.

 

The post நெல்லை காங். தலைவர் மரண வாக்குமூலம் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Related Stories: