குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழ மர நாற்றுகள்

*சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார்

குன்னூர் : குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 660 விவசாயிகளுக்கு மானிய விலையில் 7000 ஆயிரம் பழ மர நாற்றுகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரத்தில் இளித்தொரை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழ நாற்றுகள் தொகுப்பு விழா மற்றும் அட்மா திட்ட கிசான் கோஸ்தீஸ் விவசாயிகள் கூட்டம் ஆகியவை நேற்று நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு பழ நாற்று தொகுப்புகள் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை சார்ந்த ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் தமிழக முதல்வரால் கடந்த 2021ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ெமாத்தமுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் 2021-22ம் ஆண்டு முதல் 5ல் ஒரு பங்கு ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களும் தன்னிறைவு அடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தில் உழவர் நலன் சார்ந்த இதர துறைகளான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்திதுறை, கைத்தறித்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டமானது 2021.22ம் ஆண்டில் 11 ஊராட்சிகளில் ரூ.18.660 லட்சம் நிதியிலும், 2022-23ம் ஆண்டில் 7 ஊராட்சிகளில் ரூ.11.416 லட்சம் நிதியிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 6 ஊராட்சிகளில் 7.290 லட்சம் நிதியிலும் இத்திடடம் செயல்படுத்தப்படுகிறது. பழ நாற்று சாகுபடியினை ஊக்கப்படுத்த ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆரஞ்சு, கிவி, மங்குஸ்தான், எலுமிச்சை, அவகோடா, அத்தி போன்ற பழங்கள் சாகுபடி செய்ய ரூ.26.80 லட்சம் நிதியில் பழநாற்றுகள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டம் மூலம் பழ சாகுபடியினை மேற்கொண்டு கூடுதல் வருமானம் பெற வேண்டும். இதுமட்டுமில்லாமல் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தோட்டக்கலைத்துறையின் மூலமாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.666.58 லட்சம் மானியத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் ரூ.10.885 லட்சம் மானியத்திலும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ரூ.28 லட்சம் மானியத்திலும், இயற்கை வேளாண்மை திட்டம் ரூ.500 லட்சம் மானியத்திலும், நுண்ணீர் பாசன திட்டம் ரூ.199 லட்சம் மானியத்திலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மொத்தம் ரூ.14 கோடியில் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எடப்பள்ளி, முட்டிநாடு, கோடமலை, அளக்கரை, அணியாடா, பைகமந்து, கேத்தி, தூதூர்மட்டம், காமராஜபுரம், கொல்லிமலை, சேமந்தாடா, கிளிஞ்சாடா ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 300 விவசாயிகளுக்கு அவகேடோ, அத்தி, பேசன் புரூட், மலேயன் ஆப்பிள், எலுமிச்சை நாற்றுகள் 10 எண்ணிகையிலும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 360 விவசாயிகளுக்கு அவகேடோ, பேரிக்காய், பேசன் புரூட், மலேயன் ஆப்பிள், சுரினாம் செர்ரி பழ நாற்றுகள் 11 எண்ணிகையில் வழங்கப்பட்டன. இவற்றின் ஒரு தொகுப்பின் விலை ரூ.200 ஆகும். 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு ரூ.50க்கு வழங்கப்பட்டது. மொத்தம் 7000 பழ நாற்றுகள் வழங்கப்பட்டது.

தார்பாலின், மின்கல தெளிப்பான், இயற்கை இடுபொருட்கள், சூரிய விளக்குபொறி, நுண்ணீர் பாசன கருவிகள், மஞ்சள் ஒட்டுபொறி, மூலிகை நாற்று தொகுப்புகள் என பல்வேறு தோட்டக்கலை நலத்திட்டங்கள், வேளாண் பொறியியல்துறை சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.

இதில் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் தாமரைசெல்வி, வேளாண்மை பொறியியல் செயற்பொறியியல் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பார்த்தசாரதி, வேளாண்மை அலுவலர் கலைவாணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழ மர நாற்றுகள் appeared first on Dinakaran.

Related Stories: