புளி விளைச்சல் புலிப்பாய்ச்சல் ஆயிரம் மெட்ரிக் டன் ஏற்றுமதி

*ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள் விவசாயம் முதன்மை தொழிலாக இருந்தாலும் கூட, பனைமரம், புளிய மரம் சார்ந்த தொழில்களில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாயல்குடி, நரிப்பையூர், மேலக்கிடாரம், மேலச்செல்வனூர் போன்ற செம்மண் பகுதிகள், திருப்புல்லாணி, ராமநாதபுரம், நயினார்கோயில், திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, போகலூர், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள், குளங்கள், கண்மாய் போன்ற நீர்பிடி பகுதிகள் மட்டுமின்றி வீட்டு பகுதிகள் என லட்சக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 வருடங்களை கடந்த மரங்கள் அதிகளவில் உள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சிகளால் புளி காய்ப்பது குறைந்து, புளி வரத்தும் குறைந்து காணப்பட்டது. மரங்கள் பட்டுபோனதால் மரச்சாமான், விறகு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக சில இடங்களில் பழைய மரங்கள் வெட்டப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களாக நல்ல மழை பெய்தததால் புளியமரங்கள் நன்றாக துளிர் விட்டு வளர்ந்தது. இதனால் இந்தாண்டு புளியங்காய் நன்றாக வளர்ந்து வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் மரத்தில் ஏறி புளியம்பழம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதுகுளத்தூர் வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்தாண்டு புளி வரத்து அதிகரித்துள்ளதால் புளியமுத்து வரத்தும் அதிகரித்துள்ளது. முத்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ புளி ரூ.80 முதல் ரூ.100 வரைக்கும், முத்தோடு உள்ள புளி ரூ.40 முதல் தரத்திற்கேற்றார் போல் மொத்த வியாபாரிகள் வாங்குகின்றனர். புளி கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிகமாக பசை தயாரிப்பிற்கு பயன்படுவதால் சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 வெளிநாடுகளுக்கு ஆண்டிற்கு ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்திலிருந்து சுமார் 1000 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சாதாரண புளி மற்றும் முத்து கூட அந்நிய செலாவணியை ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது’’ என்றார்.

The post புளி விளைச்சல் புலிப்பாய்ச்சல் ஆயிரம் மெட்ரிக் டன் ஏற்றுமதி appeared first on Dinakaran.

Related Stories: