தேங்காய் விலை கடும் வீழ்ச்சி எதிரொலி விரக்தியின் விளிம்பில் தென்னை விவசாயிகள்: அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென எதிர்பார்ப்பு

பேராவூரணி: தேங்காய் விலை கடும் வீழ்ச்சி எதிரொலியாக விரக்தியின் விளிம்பில் இருக்கும் தென்னை விவசாயிகள் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கோவை, திருப்பூர், திண்டுக்கல் தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ,புதுக்கோட்டை , தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவாக தென்னை சாகுபடி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வட்டங்களில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்து வருகிறது. பராமரிப்பதற்கு தகுதியானவர்கள் கிடைக்காத காரணத்தால் பெரும்பாலானோர் நெல் விளையும் நிலங்களை எல்லாம் தென்னை பயிரிட்டு தென்னந்தோப்புகளாக மாற்றினர். வாழ்வாதாரத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் முக்கிய காரணமாக தென்னை விவசாயம் மாறிப்போனது. ஓரளவுக்கு நிலையான வருமானம் தென்னை மூலம் கிடைத்தது. இதனால் தென்னை விவசாயிகள் தங்களது குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் , ஆட்சிப்பணிக்கான போட்டி தேர்வு மையங்களில் தரமான கல்வி நிறுவனங்களில் சேர்த்து உயர்தரமான கல்வி வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தனர். கல்வியின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தென்னை விவசாயிகளின் வாரிசுகள் சென்று வருவாய் ஈட்டினர். அதன் மூலம் மேலும் தென்னந்தோப்புகளை விரிவுபடுத்தினர். இதனை பார்த்த மற்ற சிறு விவசாயிகளும் தங்களிடம் இருந்த குறைந்த இடங்களிலும் தென்னை பயிரிட்டனர். பெற்ற பிள்ளைகள் கஞ்சி ஊற்றவில்லை என்றாலும், தென்னம்பிள்ளை காப்பாற்றும் என்ற நம்பிக்கை 2018 கஜா புயல் வரை இருந்தது.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் தென்னை விவசாயிகள் அனைவரும் நிலை குலைந்து போனார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாற்றம் அடைந்தனர். சாய்ந்த தென்னை மரங்களுக்கு அரசின் இழப்பீடு , நிவாரண உதவிகள் மூலம் மீண்டும் புதிதாக தென்னை பயிரிட்டு, ஒரளவுக்கு பலன் கொடுக்கும் நிலையில் எதிர்பாராத அளவுக்கு தேங்காய் விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 வரை விற்பனையான ஒரு தேங்காய் இன்று ரூ.7,க்கும் ரூ.8க்கும் விற்கும் நிலை உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளான தென்னை விவசாயிகள் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தென்னை விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்கின்றனர். இதுகுறித்து கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி கூறியதாவது: தமிழக அரசு தென்னை விவசாயிகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும்பாலான தென்னை விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பாமாயில் இறக்குமதிக்கு அரசு தடை விதித்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலை, மதியம் சத்துணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். கேரளாவில் கூட்டுறவுத்துறை மூலம் உரித்த தேங்காய்களை கொள்முதல் செய்வதைப்போல் தமிழகத்திலும் உரித்த தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும். தென்னையிலிருந்து நீராபானம் எடுத்து விற்பனை செய்வதற்கு அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். தென்னங்கள் எடுத்து விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். தென்னை சார்ந்த உற்ப்பத்தி பொருட்களை உள்நாடுகளில் விற்பனை செய்யவும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதல் விலையை ரூ.140 என விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட தேவைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தென்னை விவசாயிகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தேங்காய் விலை கடும் வீழ்ச்சி எதிரொலி விரக்தியின் விளிம்பில் தென்னை விவசாயிகள்: அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: