ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி: ஆக.4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வாரணாசி: ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள்களின் உருவங்கள் இருப்பதாகவும், அவற்றிற்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிருங்கார் கவுரி உள்ளிட்ட இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி ராக்கி சிங் உள்பட 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிறப்பு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

வாரணாசி மாவட்ட கோர்ட்டில் இந்த மனு மீதான விசாரணையில் இருதரப்பு வாதங்களும் கடந்த 14ல் முடிவடைந்தது. இந்நிலையில் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காலை 8-12 மணி வரை ஆய்வு செய்யலாம், தொழுகைக்கு இடையூறு செய்யக்கூடாது. மசூதியை சேதப்படுத்தக் கூடாது. மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை ‛பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆய்வறிக்கையை ஆக.4ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

The post ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி: ஆக.4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: