ஜோகோவிச் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவாரா அல்கராஸ்? பைனலில் இன்று பலப்பரீட்சை

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுடன், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் இன்று மோதுகிறார். செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் (36 வயது, 2வது ரேங்க்) 9வது முறையாக விம்பிள்டன் பைனலில் விளையாட உள்ளார். ஏற்கனவே 7 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார். மேலும் 2014க்கு பிறகு விம்பிள்டன் பைனலில் ஜோகோவிச் தோற்றதே இல்லை. பெடரர், நடால் என முன்னணி வீரர்கள் இல்லாததால், எதிர்பார்த்தபடியே பைனலுக்கு முன்னேறி உள்ள ஜோகோவிச் 8வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

இந்த போட்டியில் வென்றால் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் மார்கரெட் கோர்ட் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார். அதே சமயம் இளம் வீரர் அல்கராஸ் (20வயது, ஸ்பெயின்) முதல் முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறி உள்ளார். யுஎஸ் ஓபனில் நடப்பு சாம்பியனான கார்லோஸ் அதிகமான ஏடிபி போட்டிகளில் வென்றே முதல் இடத்தை பிடித்தவர். ஸ்பெயினின் நடால் ஆடாத குறையை அல்கராஸ் தீர்த்து வருகிறார் என்றால் மிகையில்லை. பிரெஞ்ச் ஓபனில் காயம் காரணமாக அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோற்க நேர்ந்தது. இந்த முறை காயம் என எந்த பிரச்னையும் இல்லாததால் அனுபவ வீரர் ஜோகோவிச்சுக்கு கடும் சவாலாக அல்கராஸ் விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை. அனுபவ வீரர் ஜோகோவிச்சின் ஆதிக்கத்துக்கு, இளைய தலைமுறை முடிவுகட்டுமா என்பதே டென்னிஸ் உலகின் இன்றைய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

* இருவரும் 2 முறை மோதியுள்ளதில் 1-1 என சமநிலை வகிக்கின்றனர்.
* 2022 மாட்ரிட் ஓபன் அரையிறுதியில் கார்லோஸ் 6-7, 7-5, 7-6 என ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
* 2023 பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச் 6-3, 5-7, 6-1, 6-1 என கார்லோசை சாய்த்தார்.

The post ஜோகோவிச் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவாரா அல்கராஸ்? பைனலில் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: