கார்கே அறிவுரையை ஏற்று கெலாட்டுடன் நடந்த மோதலை மன்னித்து, மறந்து விட்டேன்: சச்சின் பைலட் அறிவிப்பு

புதுடெல்லி: கட்சித்தலைவர் கார்கே அறிவுரையை ஏற்று அசோக் கெலாட்டுடன் நடந்த மோதலை மன்னித்து, மறந்து விட்டேன் என்று சச்சின் பைலட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் 2 முறை அழைத்து சமரசம் செய்தனர். இதுபற்றி சச்சின் பைலட் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த கால பிரச்னைகளை மன்னித்து விடுமாறும், மறந்துவிடுமாறும் கூறி முன்னேறிச் செல்லுமாறு அறிவுறுத்தினார். இது ஒரு கட்டளையைப் போல் இல்லாமல் ஒரு ஆலோசனையாக இருந்தது.

இதை நான் ஏற்றுக்கொண்டேன். அவரது அறிவுரைப்படி ராஜஸ்தான் தேர்தலை நாங்கள் கூட்டுத்தலைமை அடிப்படையில் சந்திக்க இருக்கிறோம். முதல்வர் அசோக் கெலாட் என்னை விட மூத்தவர், அனுபவம் அதிகம். அவர் தோள்களில் அதிக பொறுப்புகள் உள்ளன. நான் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ​​அனைவரையும் அரவணைத்துச் செல்ல முயற்சித்தேன். இன்று அவர் முதல்வர். அவரும் அனைவரையும் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். கெலாட் அரசை நான் விமர்சனம் செய்தேன். அந்த காலம் கடந்துவிட்டது. அது அனைவருக்கும் பொருந்தும் . நான் அதை நம்புகிறேன், நாம் இப்போது முன்னேறி, புதிய சவால்களைச் சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கார்கே அறிவுரையை ஏற்று கெலாட்டுடன் நடந்த மோதலை மன்னித்து, மறந்து விட்டேன்: சச்சின் பைலட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: