காஞ்சிபுரத்தில் ரூ.1659 லட்சம் மதிப்பில் திடக்கழிவு வாகனங்கள்: அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது, 2022-23ம் ஆண்டிற்கான, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.460 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அமைக்கும் பணி, அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ், ரூ.229.50 லட்சம் மதிப்பீட்டில் வரதராஜ குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி மற்றும் கலெக்டர் அலுவலக வளாக காவல் அரங்கம் மைதானத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.1659.20 லட்சம் மதிப்பீட்டில் வெளிக்கொணர்வு முகமை மூலம் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு வாகனங்களை அறிமுகப்படுத்தி கொடியசைத்து, துவக்கி வைத்தார்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் 40 கடைகள் கொண்டு, இயங்கி வந்த ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டினை புதியதாக அமைத்து மேம்படுத்தும் பணிக்கும், புதியதாக அமைக்கப்படும் கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா, உயர்மின் கோபுர விளக்குகள் மற்றும் இருச்சக்கர வாகன நிறுத்தம் ஆகிய நவீன வசதிகள் கொண்டு அமைப்பதற்கு, 2022-23ம் ஆண்டிற்கான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.460 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் மார்க்கெட் கட்டிடத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.

மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அமைந்துள்ள முருகன் குடியிருப்பு மற்றும் தாட்டித்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த வடகிழக்கு பருவமழையின்போது சேதமடைந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இப்பாலத்தின் வழியாக முருகன் குடியிருப்பு, வரதராஜன் குடியிருப்பு, தாட்டி தோப்பு, பல்லவர் குடியிருப்பு, அண்ணா நகர், கிருஷ்ணா நகர், செல்லியம்மன் நகர், எர்வாய், குளாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 1,500 குடியிருப்புகளில் வசிக்கும் 6 ஆயிரம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இப்பாலம் சேதமடைந்துள்ளதால் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

இதனால், இப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், கல்லூரி, மாணவ – மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் மகளிர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேற்படி, 2022-23ம் ஆண்டிற்கான அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு திட்ட நிதி கீழ், ரூ.229.50 லட்சம் மதிப்பீட்டில் முருகன் குடியிருப்பு மற்றும் தாட்டித்தோப்பு பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தல் பணிக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். இதனைதொடர்ந்து, 2022-23ம் ஆண்டிற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் கீழ், ரூ.1659.20 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வெளிக்கொணர்வு முறையில் பணியாளர்கள் மற்றும் வாகனங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிமுகப்படுத்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர பொறியாளர் கணேசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் ரூ.1659 லட்சம் மதிப்பில் திடக்கழிவு வாகனங்கள்: அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: