மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்டுக்கு வேறு குறிக்கோள்: மம்தா குற்றச்சாட்டு

கூச் பெஹார்: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘நாங்கள் ஒன்றிய அரசான பாஜவிற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம். ஆனால் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை மேற்கு வங்கத்தில் பாஜவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு முயற்சிக்கிறது. இந்த புனிதமற்ற உறவை உடைப்பேன்”என்றார். கடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியை முதல்வர் மம்தா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்,‘‘பாஜவுக்கு எதிரான போரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலைத்தன்மை எப்போதுமே கேள்விக்குறிதான். கடந்த காலங்களில் பாஜவுக்கு எதிரான போரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பங்கு அனைவருக்கும் தெரிந்தது தான்” என்றார்.

* வாக்காளர்களுக்கு வீரர்கள் அச்சுறுத்தல்

பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘சில எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரிகள் எல்லையோர பகுதிகளுக்கு சென்று தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று பாஜ சார்பாக மக்களை மிரட்டிக்கொண்டு இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அச்சமின்றி தேர்தலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பாகும். அதில் ஒன்றிய அரசுக்கு எந்த பங்கும் இல்லை.” என்றார்.

The post மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்டுக்கு வேறு குறிக்கோள்: மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: