எலுமிச்சை விவசாயிகளுக்கு தோட்டத்தில் நேரடி பயிற்சி

திருவேங்கடம்: குருவிகுளம் வட்டாரத்தில் எலுமிச்சை பயிர் 450 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது எலுமிச்சை மரங்களில் கிளை கருகல் நோய், வேர் அழுகல் நோய் மற்றும் எலுமிச்சையில் நுண்ணூட்ட குறைபாடுகள் அதிகம் காணப்படுகிறது. எலுமிச்சை இலை வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட பயிரின் பச்சை தண்டு வரை கிளை நீக்கம் செய்துவிட்ட பின்பு காப்பர் ஆக்சி குளோரைடு மருந்தினை தடவ வேண்டும். நீக்கம் செய்த கிளையினை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். வேர் அழுகல் நோய்க்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தினை நீரில் கரைத்து பயிரினை சுற்றி மண் முழுவதும் நனைக்க வேண்டும். மேலும் பாதித்த மரத்தண்டு மற்றும் காளானை நீக்கிய பின் சிஓசி மருந்தினை பூச வேண்டும். மரத்தின் தண்டு பகுதியில் நேரடியாக நீர் பாய்ச்ச கூடாது. அதனை தவிர்க்க விவசாயிகள் சொட்டுநீர் பாசன திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எலுமிச்சை மரத்தில் ஏற்படும் நுண்ணூட்ட குறைபாட்டினை நீக்க கேவிகே சிட்ரஸ் ஸ்பெஷல் நுண்ணூட்ட உரத்தினை இலை வழியாக அளிக்க வேண்டும். கேவிகே இல் முன்பதிவு செய்வதன் மூலம் நுண்ணூட்ட உரத்தினை பெற்றுக்கொள்ளலாம். எனவே எலுமிச்சை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளம் கிராமத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் ஊர்மேல்அழகியான் அறிவியல் நிலையத்திலிருந்து இளவரசன், பாலசுப்ரமணியம் மற்றும் வட்டார தோட்டக்கலை துறை அதிகாரிகள் எலுமிச்சை தோட்டத்தில் நேரடி பயிற்சி வழங்கினர். மேலும் விவரங்களுக்கு கேவிகே அல்லது வட்டார தோட்டக்கலைத் துறையினை அணுகலாம் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

The post எலுமிச்சை விவசாயிகளுக்கு தோட்டத்தில் நேரடி பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: