திருமுல்லைவாயல் தென்றல் நகர் நற்கருணைநாதர் தேவாலய திருவிழா தேர்பவனி கோலாகலம்

ஆவடி: திருமுல்லைவாயல் தென்றல் நகரில் உள்ள நற்கருணைநாதர் தேவாலயத்தில் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி ஆண்டகை கலந்து கொண்டு திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார்.இந்தாண்டு பெருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 15ம் தேதி சிறப்பு நவ நாள் திருப்பலி ‘புனிதத்தின் ஊற்று’ என்ற கருத்தில் நடைபெற்றது. 16ம் தேதி நற்கருணை ஆசீர்வாத பெருவிழா திருப்பலி ‘நலம் தரும் மருந்து’ என்ற தலைப்பில் நடைபெற்றது.

17ம் தேதி ‘மரியாள் ஈன்றெடுத்த கனி’ என்ற சிந்தனையில் சிறப்பு திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் நடைபெற்றது. இந்த திருப்பலியை சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி ஆண்டகை தலைமை வகித்து நடத்தி வைத்தார். நேற்று இரவு 7 மணிக்கு ஆடம்பரத் தேர்ப்பவனி நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு ‘ஆன்ம வாழ்வின் ஆதாரம்’ என்ற சிந்தனையில் புதுநன்மை பெருவிழா திருப்பலி விமரிசையாக நடைபெற்றது. ஆயரின் பதில் குருக்கள் அதிபர் பேரருட்தந்தை ஜி.ஏ.அந்தோனிசாமி (மயிலை லஸ் சர்ச்) மற்றும் பங்கு தந்தை மனுவேல் ஆகியோர் இந்த திருப்பலியை நடத்தி வைத்தார்கள். இதன்பிறகு கொடியிறக்கம் நடந்தது.

இதில் ஏராளமான இறைமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த திருவிழா நிகழ்ச்சிகளை பங்கு தந்தை மனுவேல் தலைமையில் அருட் சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

The post திருமுல்லைவாயல் தென்றல் நகர் நற்கருணைநாதர் தேவாலய திருவிழா தேர்பவனி கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: