இஸ்லாமியர்கள் தந்த நிலத்தில் கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு: சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் கிராமம்

திருப்பூர்: திருப்பூர் அருகே இஸ்லாமியர்கள் இலவசமாக வழங்கிய இடத்தில் கோவில் கட்டி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. படியூரை அடுத்த ஓட்டப்பாளையத்துக்குட்பட்ட ரோஸ் கார்டன் பகுதியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் சகோதரர்களாக வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் தொழுகைக்கான பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. இந்து குடும்பத்தினர்கள் வழிபட கோவில் இல்லாததால் புதிதாக கோயில் கட்ட திட்டமிடபட்டுள்ளது.

ஆனால் அதற்கு போதுமான இடம் இல்லாமல் இருந்த நிலையில் அதனை அறிந்த இஸ்லாமியர்கள் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை இந்து சகோதரர்களுக்கு தானமாக வழங்கினர். அந்த இடத்தில் முறைப்படி விநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழாவும் விமரிசையாக நடைபெற்றது. அப்போது இஸ்லாமியர்கள் 7 தட்டுகளில் சீர்வரிசை சுமந்து வந்து வழங்கி குடமுழுக்கில் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கியது மதநல்லிணக்கத்தை எடுத்துஉரைப்பதாக அமைந்தது.

 

The post இஸ்லாமியர்கள் தந்த நிலத்தில் கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு: சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் கிராமம் appeared first on Dinakaran.

Related Stories: