முதல்வர் குறித்து அவதூறு: விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.தமிழக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி மற்றும் அதே ஆண்டு ஜூலை 25ம் தேதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக, விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்- 1ல் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதுபோன்று 2022ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திலும் அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வானூர் அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.விசண்முகம் நேரில் ஆஜரானார்.
இதற்கிடையே இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கான உத்தரவு நகலை சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ராதிகாவிடம் அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post முதல்வர் குறித்து அவதூறு: விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: