அரசு ஆவணங்களை பதுக்கியதாக குற்றச்சாட்டு டிரம்புக்கு ஆதரவாக களமிறங்க தயாராகும் குடியரசு கட்சி: அதிபர் தேர்தல் போட்டிக்கு பின்னடைவா?

வாஷிங்டன்: அரசின் ரகசிய ஆவணங்களை பதுக்கியதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவி வகித்த டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது, அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டிரம்புக்கு புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் எப்பிஐ அதிரடி சோதனை நடத்தியது. அதில் 100க்கும் மேற்பட்ட மிக முக்கியமான அரசு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் அவர் மீது அமெரிக்க நீதித்துறை 7 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இதன் விசாரணை புளோரிடா பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் பதிவு, அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்புக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் அதனையும் தனக்கு சாதகமாக்கும் வித்தை தெரிந்தவர் டிரம்ப் என்று அவரை நன்கு அறிந்த குடியரசுக் கட்சி எம்பி.க்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் இது தொடர்பான விவாதத்தின் போது, அதிபர் பைடன் மற்றும் நீதித்துறை சேர்ந்து டிரம்ப்புக்கு எதிராக கூட்டு சதி செய்வதாக வாதிடுவதற்கு குடியரசுக் கட்சி எம்பி.க்கள் தயாராகி வருகின்றனர். அவர்கள் டிரம்பை பாதுகாக்க, அதிபர் பைடன் மற்றும் நீதித்துறையின் மீது குற்றம் சாட்டுவதற்கான ஆதாரங்களை திரட்டி உள்ளனர். ஆனால் அரசு தரப்பிலோ, டிரம்ப்பின் வார்த்தைகள், செயல்பாடுகள் குறித்து அவரது வக்கீல்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் இதர சாட்சியங்கள் கூறியதை மேற்கோள் காட்டி டிரம்ப் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்து சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி அவரது டிவிட்டரில், ‘’நீதித்துறையின் முடிவுகளில் தான் தலையிடுவது கிடையாது என்று அதிபர் பைடன் கூறியிருப்பது அப்பட்டமான பொய். டிரம்ப் மீதான குற்றச்சாட்டு பதிவு மோசமான அநீதி. இந்த வெட்கக் கேடான செயலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post அரசு ஆவணங்களை பதுக்கியதாக குற்றச்சாட்டு டிரம்புக்கு ஆதரவாக களமிறங்க தயாராகும் குடியரசு கட்சி: அதிபர் தேர்தல் போட்டிக்கு பின்னடைவா? appeared first on Dinakaran.

Related Stories: