6 நாள் பயணத்தை முடித்து கொண்டு தமிழ்நாடு ஆளுநர் ஊட்டியில் இருந்து சென்னைக்கு சென்றார்

 

ஊட்டி, ஜூன் 10: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து ஊட்டிக்கு வருகை புரிந்தார். ராஜ்பவன் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கினார். கடந்த 5ம் தேதி ராஜ்பவன் மாளிகையில் பல்கலைகழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு நடந்தது. இதனை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து 6ம் தேதி தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்று பார்வையிட்டார். 7ம் தேதியன்று ஊட்டியில் இருந்து குன்னூர் வரை மலை ரயிலில் பயணித்தார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக ஊட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் ஊட்டியில் இருந்து அவலாஞ்சி பகுதிக்கு சென்றார். அங்கு அவலாஞ்சி அணையை சுற்றி பார்த்தார். பின்னர், அங்குள்ள வனத்துறை ஓய்வு விடுதிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

அப்போது தோடர் பழங்குடியின மக்கள் ஆளுரை சந்தித்தனர். தொடர்ந்து தங்களது பாரம்பரிய எம்ராய்டரி சால்வையை ஆளுநருக்கும், அவரது மனைவிக்கும் வழங்கினர். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது 6 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று காலை 9.20 மணியளவில் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க ராஜ்பவன் மாளிகையில் இருந்து புறப்பட்டு தொட்டபெட்டா, கோத்தகிரி அரவேனு வழியாக மேட்டுபாளையம் வன கல்லூரிக்கு சென்றார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் கோவை சென்று அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்குள்ள சர்க்யூட் அவுஸில் ஓய்வெடுத்த பின்னர் மாலை 3 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

The post 6 நாள் பயணத்தை முடித்து கொண்டு தமிழ்நாடு ஆளுநர் ஊட்டியில் இருந்து சென்னைக்கு சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: