அரசின் ரகசிய ஆவணங்கள் பதுக்கல் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு

மியாமி: அரசின் ரகசிய ஆவணங்களை பதுக்கியதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பதவி வகித்த டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது அரசின் ரகசிய ஆவணங்கள் சிலவற்றை கொண்டு சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக டிரம்பின் புளோரிடா வீட்டில் புலனாய்வு அமைப்பான எப்பிஐ அதிரடி சோதனை நடத்தியது.

அதில் 100க்கும் மேற்பட்ட மிக முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது அமெரிக்க நீதித்துறை 7 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக நேற்று வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நீதித்துறை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், டிரம்ப் வழக்கறிஞர்கள் தகவலை தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிட தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கட்சி வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து டிரம்ப் வெளியிட்ட வீடியோ பதிவில் தான் குற்றமற்றவர்கள் என்றும் அரசியல் ஆதாயத்திற்கான வழக்குகள் இவை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

ஏற்கனவே டிரம்ப் மீது ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தது உட்பட நியூயார்க், வாஷிங்டன், அட்லாண்டா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன. இப்போது இத்துடன் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது, அதிபர் வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அரசின் ரகசிய ஆவணங்கள் பதுக்கல் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: