இத்தாலி நாடாளுமன்ற அவையில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய எம்பி

ரோம்: இத்தாலி நாடாளுமன்ற அறையில் தனது இருக்கையில் அமர்ந்தவாறே குழந்தைக்கு பெண் எம்பி கில்டா ஸ்போர்டியெல்லோ பாலூட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி நாட்டின் பெண் எம்பியான கில்டா ஸ்போர்டியெல்லோ, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு தனது கைக்குழந்தையுடன் வந்தார். அவையில் பொது நிர்வாகம் தொடர்பான சட்டம் குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த எம்பி கில்டா ஸ்போர்டியெல்லோ, தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே அவை நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார். இத்தாலியின் நாடாளுமன்றமானது, ஆண் எம்பிக்களின் ஆதிக்கம் கொண்டதாக கருதப்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், கில்டா ஸ்போர்டியெல்லோ தனது குழந்தைக்கு அவைக்குள் தாய்ப்பால் கொடுத்தது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு தலைமை வகித்த ஜியோர்ஜியோ முலே கூறுகையில், ‘இத்தாலி நாடாளுமன்ற வரலாற்றில் பெண் எம்பி ஒருவர், அவைக்குள் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது இதுவே முதல் முறை. பணியிடங்களில் பெண்களின் தங்களது குழந்தைகளை பராமரிக்க வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொடர்ந்து எம்பி கில்டா ஸ்போர்டியெல்லோ வலியுறுத்தி வருகிறார்’ என்றார்.

The post இத்தாலி நாடாளுமன்ற அவையில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய எம்பி appeared first on Dinakaran.

Related Stories: