புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் குடும்பத்தை சுமக்கும் அவலம் குழந்தை தொழிலாளர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

*குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க கோரிக்கை

*கடந்த ஆண்டில் மாநிலம் முழுவதும்

*2 ஆயிரம் பேர் மீட்பு

வேலூர் : புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் குடும்பத்தை சுமக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. எனவே குழந்தை தொழிலாளர்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேரம் அல்லது முழுநேரம் அடிப்படையில், பொருளாதாரம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நடைமுறையில் உள்ளது. இந்நடைமுறையானது, அவர்களின் குழந்தைப்பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள், பொருளாதார வளர்ச்சி இல்லாமை போன்றவை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறைக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

குழந்தை தொழிலாளர் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. பள்ளியில் படித்து கல்வியறிவு பெற்று வருங்கால சமுதாயம் மேம்பட வேண்டும். கல்விக்குத் தடையாக வறுமை இருக்கக்கூடாது என்பதையும் மறுப்பார் யாருமில்லை.குழந்தை பாதுகாப்பு என்பது பேசுபொருளாக மாற்றிவிட்ட இக்காலத்தில் குழந்தை தொழிலாளர்களாக பணியமர்த்தி வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைத்து அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் செயல்களும் அரங்கேறித்தான் வருகின்றன. குழந்தை தொழிலாளர்களாக பணிக்கு செல்லும் போது குழந்தைகளுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகள் மற்றும் அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. ஒன்று முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்களே குழந்தைகள், இந்த வயதில்தான் அவர்களை தனித்துவத்தில் சிறந்து விளங்குவதற்கான ஆற்றலை உருவாக்க வேண்டும்.

ஆனால் சில குழந்தைகளது பெற்றோரின் அசமந்தப்போக்கு, அறியாமை, வறுமை, பாலின வேறுபாடு, சரியான கல்வி அறிவின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர். முக்கியமாக சமூகத்தில் காணப்படும் பொருளாதார பிரச்னையே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வேலை தேடி அலையும் போது, கிடைக்கும் வேலையை செய்து கொண்டு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தாங்கள் வேலை செய்யும் அல்லது அருகில் உள்ள ஏதாவது ஒரு பணிக்கு குழந்தைகளை அனுப்பி விடுகின்றனர்.

இவ்வாறு செல்லும் சமயத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மீக தலங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தின்பண்டங்கள், பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தங்கள் குழந்தைத்தனமான பேச்சுகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

அரசு குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் வகுத்தாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சில குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. ஆயினும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உலகில் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கித் தர வேண்டியது ஒவ்வொருவரது கடைமையாகும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்களின் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொருளாதாராத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான செல்போன்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக யூனிசெப் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 மில்லியன் ஆக உயரும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2021-22ம் ஆண்டில் மொத்தம் 13,271 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பஞ்சாப்பில் 4,867 பேரும், தமிழகத்தில் 2,586 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் குடும்பத்தை சுமக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக வைத்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தை தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறியதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தது. கட்டாயக்கல்வி என்பது 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் கல்வி வழங்குவது மாநில அரசின் கடமையாகும். மாணவர்களின் சேர்க்கை மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு வருவது உறுதி செய்தல், உயர் தொடக்க நிலையை நிறைவு செய்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு வேளை கல்வி கற்பதற்கான வயதை பெற்று அந்த குழந்தை பள்ளியில் சேரவில்லை என்றால் வயதுக்கு ஏற்ற வகுப்பில் அவர்களைச் சேர்த்து அவர்களுக்கான கல்விக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். 6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகள் எவரும் கல்வி கற்க செல்லாமல் இல்லை என்பதை இச்சமூகம் தன் கடமையாகக் கொள்ள வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில் எந்தக் குழந்தையும் கல்வி கற்காமல் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும் இச்சட்டப்படி 6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளின் பட்டியல் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலும் இருக்க வேண்டும். கட்டாயக் கல்விச்சட்டம் இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. பல பெற்றோர் வேலைவாய்ப்புத் தேடி பல ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இந்நிலையில் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
அதற்கு அரசாங்கம் இச்சட்டத்தைப் பயன்படுத்தி அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்பாடுசெய்யலாம். இல்லை என்றால் தற்காலிக பள்ளிகள் அவர்களுக்காக அமைத்து தரலாம். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளுக்காக வட மாநிலத்தில் இருந்து பல குடும்பங்கள் வருகை தருகின்றன. அவர்களுக்காக நடமாடும் பள்ளிகளை ஏற்படுத்தலாம்.

அதன் மூலம் தினமும் குறிப்பிட்ட இடத்தில் அவர்களுக்கான கல்வியை தரலாம். மொத்தத்தில் இடம் பெயரும் குழந்தைகளும் கல்வி கற்பதற்கு கல்வியை இலவசமாகப் பெறுவதற்கு அரசிலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறது. அதனை அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் புலம் பெயர் குழந்தைகளுக்கான கல்வி என்பது அவர்களுக்கு கிடைக்காமலேயே போக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூகத்தின் மீது வழக்கு ெதாடரமுடியும்

கிராமம், நகரங்களில் எதுவாயினும், காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் இந்த கட்டாயக்கல்விச் சட்டத்தில் சில கடமைகள் உள்ளன. எந்தக் குழந்தையும் கல்வி கற்கும் வயதில் எங்கும் வேலைக்குச் செல்லக்கூடாது. அப்படி எந்தக் குழந்தையாவது சாலைகளில் தென்பட்டால் உடனடியாக அந்தக் குழந்தையின் பெற்றோரையும் உடன் அழைத்துச் சென்று அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டிய பொறுப்பு காவல் ஆய்வாளர்களுக்கும் உண்டு. பள்ளி வயதுக்குழந்தைகள் யாராவது தெருவிலோ, கடைகளிலோ செங்கல் சூளைகளிலோ இருந்தால் அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

ஒருவேளை ஒரு குழந்தை கல்வி கற்காமல் போய்விட்டது என்றால் அந்தக் குழந்தையே இச்சமூகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். பெற்றோர் ஊராட்சி மன்ற தலைவர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட இச்சமூகம் என்னைக் கல்வி கற்க சொல்லவில்லை என்று வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை பெற்றத்தரவும் இச்சட்டத்தில் இடம் உள்ளது.

The post புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் குடும்பத்தை சுமக்கும் அவலம் குழந்தை தொழிலாளர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: