மின்கம்பத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

தொண்டாமுத்தூர், ஜூன்8: கோவை அருகே மின்கம்பம் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். கோவை அருகே வடவள்ளி- தொண்டாமுத்தூர் ரோட்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்று கொண்டிருந்த கார் அபாய வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து கார் மீது விழுந்ததில் கார் சேதமடைந்தது. காரில் வந்த 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை

அவ்வழியாக வந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 2 வாலிபர்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கம்பம் உடைந்து விழுந்ததால் அப்பகுதியில் நள்ளிரவு முதல் மின் தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தொண்டாமுத்தூர்-வடவள்ளி ரோட்டில் 6 இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன. அந்த வளைவுகளில் சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும்.மேலும் அபாய வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின்கம்பத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: