திப்பு சுல்தான் பற்றிய சமூக வலைதள பதிவால் மகாராஷ்டிராவில் வன்முறை வெடித்தது: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்துக்கு சத்ரபதி சாம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றத்துக்கு சில அரசியல் தலைவர்கள், அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவுரங்காபாத்தில் இருந்து 114 கிமீ தொலைவில் உள்ள அகமது நகரில் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஊர்வலத்தில், அவுரங்கசீப் உருவம் பொறித்த பேனர்களை 4 பேர் ஏந்திச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, முகலாய மன்னர் திப்பு சுல்தான் படத்துடன் சிலர் சமூக வலைதளத்தில் திப்பு சுல்தானை புகழும் வகையில் ஆடியோவை பகிர்ந்திருந்தனர். சிலர் தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ ஆகவும் வைத்திருந்தனர். இதை கண்டித்து இந்து அமைப்பினர் சிலர் கோலாப்பூரில் பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், சில அமைப்புகளின் அழைப்பை ஏற்று, அந்த அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று கோலாப்பூர் சிவாஜி சவுக்கில் கூடினர். முகலாய மன்னர்களை புகழ்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கூட்டம் கலையத் தொடங்கியது. ஆனால், அப்போது சிலர் அந்த கூட்டத்தின் மீது கற்களை வீசினர். ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியதால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது.

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். மேலும் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். தடை உத்தரவு பிறக்கப்பட்ட நிலையில், கோலாப்பூரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

The post திப்பு சுல்தான் பற்றிய சமூக வலைதள பதிவால் மகாராஷ்டிராவில் வன்முறை வெடித்தது: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: