ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் பேச்சுவார்த்தை 15ம் தேதி வரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு

அவுரங்காபாத்: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டம் வருகிற 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருடனான பேச்சுவார்த்தைக்கு பின் மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் கடந்த 10 ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிரிஜ் பூஷனுக்கு எதிராக 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், பிரிஜ் பூஷன் கைது செய்ப்படவில்லை.

வீராங்கனைகளின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேல் தொடர்ந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர்கள் சனிக்கிழமை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் அவரது கணவர் சத்யவார்த் மற்றும் ஜிதேந்தர் கின்ஹா ஆகியோர் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரை நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். எனினும் சுமார் 5 மணி நேரம் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சாக்‌ஷி மாலிக், ‘‘பிரிஜ் பூஷன் மீதான போலீஸ் விசாரணை 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அதுவரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்” என்றார்.

குற்றப்பத்திரிகை
வீராங்கனைகள் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர், ‘‘மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூன் 30ம் தேதிக்குள் நடத்தப்படும்.ஜூன் 15ம் தேதி விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.

The post ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் பேச்சுவார்த்தை 15ம் தேதி வரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: