இழப்பீட்டுத் தொகை வழங்காததால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

விழுப்புரம், ஜூன் 8: இழப்பீட்டு தொகை வழங்காததால், நீதிமன்ற ஊழியர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் சாலாமேடைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி ராதாம்மாள். இவருக்கு சொந்தமான 2400 சதுரஅடி பரப்பிலான இடத்தை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு கட்டுவதற்காக கடந்த 1992ம் ஆண்டு கையகப்படுத்தியது. வீட்டு வசதி வாரியத் துறையினர் தெரிவித்தபடி இடத்துக்கான சதுர அடிக்கு 1 ரூபாய் 90 பைசா என்று நிர்ணயம் செய்தது. இது போதாது என்று 2001ம் ஆண்டு ராதாம்மாள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் சதுர அடிக்கு ரூ.19.50 பைசா வழங்க வேண்டும் என்று 2005ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பின்படி உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினர் தராததால், கடந்த 2013ம் ஆண்டு ராதாம்மாள் தரப்பில் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனை விசாரித்த நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.4,99,260 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவிட்டது. இதனை வழங்காத பட்சத்தில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களான 5 கம்ப்யூட்டர்கள், 10 பீரோக்கள், 10 பேன்கள், 10 டேபிள்கள், ஆட்சியரின் வாகனம் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து இழப்பீட்டு தொகை வழங்காததால் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நோட்டீசை காண்பித்து ஜப்தி செய்ய முயன்றனர். அவர்களிடம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹரிதாஸ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடபடிக்கையை ஒத்தி வைத்து விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post இழப்பீட்டுத் தொகை வழங்காததால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: