திருப்பதி உழவர் சந்தையில் ₹10 செலுத்தினால் துணி பை வழங்கும் தானியங்கி இயந்திரம்

*கலெக்டர் திறந்து வைத்தார்

திருப்பதி : திருப்பதி உழவர் சந்தையில் ₹10 செலுத்தினால், துணி பைகள் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை கலெக்டர் வெங்கட ரமணா திறந்து வைத்தார்.திருப்பதி உழவர் சந்தையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள ஏடிபி என்னும் எனி டைம் பேக் என்ற ஆட்ேடாமெட்டிக் துணி பை வழங்கும் இயந்திரத்தை திருப்பதி கலெக்டர் வெங்கட ரமணா நேற்று திறந்து வைத்தார். துணிபைகளின் விற்பனையை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நரேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கட ரமணா பேசியதாவது: உழவர் சந்தையில் காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பொது மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி பைகளை தானியங்கி இயந்திரம் மூலம் பெற அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இந்த இயந்திரத்தில் ₹10 நோட்டு அல்லது இரண்டு ₹5 நாணயங்களை செலுத்தினால் துணி பைகள் நமது கைக்கு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும், பணம் செலுத்துவதை தவிர்த்து விரைவில் க்யூஆர் குறியீடு மூலம் டிஜிட்டல் பேமெண்ட் மூலமாகவும் இந்த பைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஏஇ மதன் மோகன், மார்க்கெட்டிங் உதவி மேலாளர் சுரேந்திர பாபு, ரித்து பஜார் எஸ்டேட் அதிகாரி அக்தர் ஷெரீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி உழவர் சந்தையில் ₹10 செலுத்தினால் துணி பை வழங்கும் தானியங்கி இயந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: