பள்ளி திறக்கும் நாளில் வழங்க ஏற்பாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் தயாரிப்பு மும்முரம்

*ஒரு மாணவருக்கு 4 செட் கிடைக்கும்

நெல்லை : அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச சீருடைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பள்ளி திறக்கப்படும் நாளில் இந்த சீருடைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஒரு மாணவருக்கு 4 செட் இலவச சீருடை கிடைக்கும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு சலுகைகள், நலத்திட்டங்களை இலவசமாக வழங்குகின்றன. மேலும் புதிய முறையிலான கற்பித்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த கல்வியாண்டு முதல் இல்லம் தேடி கல்வித்திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் கல்வி, நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து பயில்வது அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் மாதம் தொடங்கி ஒரு வாரம் ஆன பின்னரும் வெயில் தாக்கம் குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பள்ளி திறப்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. புதிய அறிவிப்பின் படி 2023-24ம் கல்வியாண்டிற்கு 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதை முன்னிட்டு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் மற்றும் பிற இலவச கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலவச திட்டங்களில் ஒன்றான இலவச சீருடைகள் ஆண்டு தோறும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் 1 முதல் 8ம் வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 4 செட் சீருடை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவ, மாணவிகளின் வயதுக்கு ஏற்ற அளவுகளில் தயாரித்து வழங்கப்படுகிறது. இதற்காக சீருடை துணிகள் சமூநலத்துறையில் மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் மூலம் தைப்பதற்காக வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. தைத்து முடித்த சீருடைகளை ஒப்படைத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 6 முதல் 8ம் வகுப்பினருக்கு உரிய இலவச சீருடைகள் தயாரிக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. 1 முதல் 5ம் வகுப்பினருக்கு சீருடைகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெறுகின்றன. கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு தேவையான சீருடைகள் அனுப்பி வைக்கும் பணியும் நடைபெறுகிறது. சீருடை பெறும் பயனாளி மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளில் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர் என முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதி தெரிவித்தார்.

The post பள்ளி திறக்கும் நாளில் வழங்க ஏற்பாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் தயாரிப்பு மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: