திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது

பராமரிபோ: குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்‘ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் நாட்டுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சோத் சந்தோகியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய திரவுபதி முர்மு பல்வேறு துறைகள் தொடர்பான 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் சுரினாம் நாட்டில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பராமரிபோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்‘ விருதை அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சோத் சந்தோகி வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “சுரினாம் நாட்டின் உயரிய விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன். இது எனக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரம். இந்த உயரிய விருதை எனக்கு வழங்கிய சுரினாம் அரசுக்கும், அதிபருக்கும் நன்றி. இருநாடுகளிடையேயான நட்புறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கடந்த தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்தார். சுரினாம் அரசின் உயரிய விருதை பெற்ற குடியரசு தலைவர் முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

The post திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது appeared first on Dinakaran.

Related Stories: