ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ விசாரணை துவங்கியது: 7 பிரிவுகளில் வழக்கு பதிவு

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ 7 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நேற்று விசாரணையை தொடங்கியது. 10 பேர் கொண்ட சிபிஐ குழு பாலசோரில் முகாமிட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம்தேதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. சிக்னலிங் துறையில் உள்ள எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும் விபத்தின் பின்னணியில் நாசவேலை உண்டா? என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைத்து இருப்பதாக அவர் கூறினார். மேலும் ரயில் விபத்து தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சைலேஷ் குமார் பதக் தனது விசாரணையை தொடங்கினார். இந்தநிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரயில்வே அமைச்சகம் மற்றும் ஒடிசா அரசு, ஒன்றிய அரசுகளின் கோரிக்கையை ஏற்று இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 337, 338, 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்), 34 (பொதுவான நோக்கம்), 153 (சட்டவிரோதமான மற்றும் அலட்சிய நடவடிக்கை), ரயில்வே சட்டம் பிரிவு 154, 175(ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் பாலசோரில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் நகலை சிபிஐ பெற்றுக்கொண்டது.

ரயில் விபத்துக்கு காரணமான குற்றவியல் அலட்சியம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வேயின் செயல்பாடு பற்றி சிபிஐக்கு அதிகம் தெரியாததால் இதில் அதிக நிபுணத்துவம் பெற்ற ரயில் பாதுகாப்பு மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவி தேவைப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேற்று நேரில் சென்று விசாரித்தனர். ரயில் விபத்து நடந்த விதம், விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிபிஐ விசாரணை முடிந்த பிறகே, விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.

* மின்சாரம் தாக்கி 40 பேர் பலி?
ஒடிசா ரயில் விபத்தில் கோரமண்டல் ரயிலில் வந்த பயணிகளில் 40 பேர் மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனெனில் அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்த இந்த 40 பேரின் உடல்களில் எந்தவித காயமும் இல்லை. எனவே அவர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் விபத்து நடந்த போது மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்ட பெட்டியில் உள்ள பயணிகள் மீது மின்சாரம் தாக்கியதாக பாலசோர் ரயில்வே போலீசார் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். எனவே உடலில் எந்தவித காயமும் இல்லாத 40 பயணிகள் மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கலாம் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

* உயர் அதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சர் ஆலோசனை
ஒடிசாவின் பாலசோரில் இருந்து டெல்லி திரும்பிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் பேசினார். ரயில்வே நெட்வொர்க் முழுவதும் சிக்னல், தொலைத்தொடர்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் மண்டலங்களில் பாதுகாப்பு பயிற்சிகள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

* 83 சடலங்களின் அடையாளம் காண டிஎன்ஏ சேகரிப்பு
ஒடிசா ரயில்விபத்தில் பலியான 288 பேரில் 205 பேர் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 83 சடலங்களின் அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சடலத்தின் மீது உரிமை கோரும் நபர்கள் மற்றும் சடலங்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கும்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை உரிமை கோரும் நபர்கள் 10 பேரிடம் டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டது. புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதற்கான பணிகள் நடக்கின்றன. அடையாளம் தெரியாத 83 சடலங்கள் நீண்டகாலம் பாதுகாக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு மாற்றப்பட்டன. அங்கு சடலங்களை 6 மாதங்கள் பாதுகாக்க முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரே உடலுக்கு உரிமை கோருவதால் டிஎன்ஏ சோதனை அறிக்கையைப் பெற குறைந்தது 7 முதல் 10 நாட்கள் தேவைப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 4 நாட்களுக்கு பிறகு விபத்து நடந்த இடத்தை கடந்தது கோரமண்டல்
ஒடிசா மாநிலம் பஹாநகர் பஜார் பகுதியில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் சிக்கியது. விபத்து நடந்து 4 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது. அப்போது 30 கிமீ வேகத்தில் கோரமண்டல் ரயில் இயக்கப்பட்டது. ரயிலில் சென்ற பயணிகளில் பெரும்பாலானோர் அந்த இடத்தை சோகத்துடன் பார்த்தபடி பயணித்தனர். தண்டவாளங்கள் சரி செய்த பிறகு வந்தேபாரத் ரயில் உள்பட 70க்கும் மேற்பட்ட ரயில்கள் இருவழியிலும் இயக்கப்பட்டுள்ளன.

* மேற்குவங்க பயணிகள் 103 பேர் சடலம் அடையாளம் தெரிந்தது
ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்து கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை மேற்குவங்க முதல்வர் மம்தா சந்தித்துஆறுதல் கூறினார். அங்குள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று நோயாளிகளுடன் உரையாடி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 57 பயணிகள் கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றி மம்தா கூறுகையில்,’ ஒடிசா ரயில் விபத்தில் சிலர் கைகால்களை இழந்துள்ளனர், சிலர் கண்களை இழந்துள்ளனர். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சோகம். இப்போது வரை மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 103 பயணிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 30 பேரை இன்னும் காணவில்லை. இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நான் ஏற்கனவே கருணைத் தொகையாக அறிவித்துள்ளேன். ரயிலில் பயணம் செய்து மன உளைச்சலுக்கு ஆளான சுமார் 900 பேருக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும். இந்த விபத்தில் நான் மக்களுடன் இருக்க விரும்புகிறேன். பல உயிர்கள் பலியாகியுள்ளன. எனவே விபத்துக்கான உண்மை காரணம் வெளிவருவது மிகவும் முக்கியம்’ என்று அவர் கூறினார். மம்தாவுடன் அமைச்சர்கள் ஷஷி பஞ்சா, சந்திரிமா பட்டாச்சார்ஜி ஆகியோர் உடனிருந்தனர். இரு அமைச்சர்களும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளையும் பார்வையிட்டனர்.

The post ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ விசாரணை துவங்கியது: 7 பிரிவுகளில் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: