அமெரிக்காவில் மோடியை ராகுல் விமர்சிக்கும் நிலையில் இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது:  வெள்ளை மாளிகை அதிகாரி திடீர் பேட்டி

நியூயார்க்: அமெரிக்காவில் பிரதமர் மோடியை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளதாக வெள்ளை மாளிகையில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பாஜக அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ஜான் கிர்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில், இந்தியா துடிப்பான ஜனநாயகமாக செயல்படுகிறது. யாருக்கேனும் இதில் சந்தேகம் இருந்தால், அவர்கள் டெல்லிக்குச் சென்று நேரில் பாருங்கள். ஜனநாயக அமைப்புகளின் வலிமை என்பது, ஆரோக்கியமான விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன்’ என்றார். இந்திய ஜனநாயகம் குறித்து சிலர் கேள்வி எழுப்பிய நிலையில், அமெரிக்காவின் இந்த அறிக்கை முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. வரும் 22ம் தேதி பிரதமர் மோடி, அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், அவரது மனைவியும் நாட்டின் முதல் பெண்மணியுமான ஜில் பிடனும் சேர்ந்து பிரதமர் மோடிக்கு விருந்தளிக்க உள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ஜான் கிர்பியிடம் கேட்ட போது, ‘​​​​இந்தியாவும், அமெரிக்காவும் வலுவான பங்காளியாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நிறைய பொருளாதார வர்த்தகம் உள்ளது’ என்றார்.

The post அமெரிக்காவில் மோடியை ராகுல் விமர்சிக்கும் நிலையில் இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது:  வெள்ளை மாளிகை அதிகாரி திடீர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: