குறைந்த மின்னழுத்தத்தால் அடிக்கடி பழுதாகும் மின்சாதன பொருட்கள்: டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதாவதால், டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புத்தூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரச்சேரி, இரும்பேடு ஆகிய கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருவதால், இந்த 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் கருணாகரச்சேரி, இரும்பேடு கிராமங்களில் தனித்தனியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படப்பை துணை மின்நிலைய அலுவலகத்தில் கோரிக்கை மனுகொடுத்தனர். மேலும், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க டெபாசிட் தொகை கட்ட தயாராக இருப்பதாகவும், துணை மின்நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது;

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிகளில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மேற்கண்ட ஊராட்சியில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால், இந்த ஊராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. தற்போது குடியிருப்பு வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் இயக்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, வெங்காடு ஊராட்சி கருணாகரச்சேரி, இரும்பேடு பகுதியில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.

The post குறைந்த மின்னழுத்தத்தால் அடிக்கடி பழுதாகும் மின்சாதன பொருட்கள்: டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: