ஒடிசா செல்லும் விமானங்களில் நியாயமான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்: அரசு உத்தரவு

புதுடெல்லி: ஒடிசா செல்லும் விமானங்களில் பயணிகளிடம் நியாயமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னணி விமான சேவை நிறுவனமான கோ பர்ஸ்ட் நிறுவனம் கடந்த மாதம் திவாலானதாக அறிவித்ததால் அந்த நிறுவனத்தின் பல விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல வழித்தடங்களில் விமான கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்தது. ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தங்கள் உறவினர்களைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் ஒடிசா சென்றனர். அப்போது,புவனேஸ்வர் செல்லக்கூடிய விமான கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டது பயணிகளை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில், விமான கட்டணங்கள் உயர்வு குறித்து விவாதிக்க ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விமான நிறுவனங்களின் ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில வழித்தடங்களில் விமான கட்டணம் உயர்ந்துள்ளது குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார்.கோ பர்ஸ்ட் விமானங்கள் முன்பு இயக்கப்பட்ட வழித்தடத்தில் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் சம்பவங்கள் நிகழும் போது நியாயமான கட்டணங்களையே வசூலிக்க வேண்டும். நியாயமான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஒரு நடைமுறையை விமான நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா செல்லும் விமானங்களில் நியாயமான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: