டிக்கெட் கொடுக்க கவுன்டரில் ஆள் இல்லாததால் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு 300 பேர் ‘ஓசி’ பயணம்: தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க கவுன்டரில் ஆள் இல்லாததால் 300 பேர் நெல்லைக்கு பயணச் சீட்டு இல்லாமல் ‘ஓசி’யில் பயணம் செய்தனர். அங்கு வடமாநிலத்தவர்கள் பணியில் இருப்பதால் டிக்கெட் எடுக்க மிகவும் சிரமம் ஏற்படுவதாக பயணிகள் புலம்புகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு தினமும் காலை 7.20 மணி, 8.25, 10.15, 12.20, பிற்பகல் 2.30, 4.35, மாலை 6.15 மற்றும் இரவு 8.10 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் 8 முறை ரயில் செல்கிறது. இந்த ரயிலில் காலை 7.20, 8.25 ஆகிய 2 நேரங்களில் நெல்லைக்கு வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக பயணம் செய்வர். மேலும் நாசரேத், ஸ்ரீ வைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய இடைப்பட்ட ஊர்களுக்கும் ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம். இதனால் எப்போதும் இந்த 2 ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

இன்று காலை 7.20 மணி ரயிலுக்கு நெல்லைக்கு செல்ல சுமார் நூற்றுக்கணக்கானோர் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் வரிசையில் நின்றனர். ஆனால் 7.15 மணி வரை டிக்கெட் கொடுக்க கவுன்டரில் எந்தப் பணியாளரும் வரவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரம் அடைந்து போராட்டம் நடத்த தயாராயினர். இதையடுத்து அங்கு வந்த தமிழ் மொழி தெரியாத ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்கு தமிழ் தெரியாததால், பயணிகள் எந்த ஊருக்கு டிக்கெட் கேட்கிறார்கள் என்பது புரியாமல், 15 பேர்களுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து விட்டு, ‘எஸ்கேப்’ ஆகி விட்டார்.

இதுகுறித்து அங்கு நின்ற சுமார் 300 பயணிகள் திருச்செந்தூர் ரயில்வே போலீசில் புகார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் டிக்கெட் இல்லாமல் நெல்லை ரயிலில் ஏறி புறப்பட்டனர். திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுக்க பணியில் இருக்க வேண்டிய நபர், திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விடுப்பு எடுத்ததால், பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் ரயில் நிலையத்தில் தமிழ் தெரிந்தவர்களை கவுன்டரில் பணியில் அமர்த்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு இன்று சுமார் 300 பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டிக்கெட் கொடுக்க கவுன்டரில் ஆள் இல்லாததால் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு 300 பேர் ‘ஓசி’ பயணம்: தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: