14 வங்கிகளில் கணக்கு வைத்து ஆன்லைன் சூதாட்டம்: 19 பேர் கைது: ரூ.5 கோடியை முடக்க நடவடிக்கை

திருமலை: 14 வங்கிகளில் 71 கணக்குகளை வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 19 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 செல்போன்கள், 7 லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களது ரூ.5 கோடியை முடக்க வங்கிகளுக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், மதுரவாடாவில் ஒரு வீட்டை மளிகை வியாபாரம் செய்வதாக கூறி வாடகைக்கு எடுத்து ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக விசாகப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விசாகப்பட்டினம் அதிரடிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் ஒத்துழைப்புடன் அந்த கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனையடுத்து ​​மகாதேவ் புக் என்ற பெயரில் மொபைல் செயலி மூலம் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெளிநாட்டு இணையதளங்கள் மூலம் இந்த சூதாட்டத்தை நடத்தி வருவதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதில் தொடர்புடைய 19 பேரை போலீசார் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 53 செல்போன்கள், 7 லேப்டாப்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் ஆன்லைனில் சூதாட்டம் நடத்த 14 வங்கிகளில் 71 கணக்குகளை ெதாடங்கியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளை இயக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோசடிகளில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளில் உள்ள ரூ.5 கோடியை முடக்குமாறு வங்கிகளுக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து, அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலிடம் ஏராளமானோர் பணத்தை இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

The post 14 வங்கிகளில் கணக்கு வைத்து ஆன்லைன் சூதாட்டம்: 19 பேர் கைது: ரூ.5 கோடியை முடக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: