அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் மக்கள் பாஜ.வை தோல்வி அடைய செய்வார்கள்: அமெரிக்காவில் ராகுல் பேச்சு

நியூயார்க்: “அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, இந்திய மக்களும் பாஜ.வை தோல்வி அடைய செய்வார்கள்,” என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மன்ஹட்டனில் உள்ள ஜாவித்ஸ் மையத்தில் வெளிநாடுகளில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது: கர்நாடக தேர்தலில் பாஜ.வை காங்கிரசால் அழிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாஜ தோற்கடிக்கப்படவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் அதனை அடித்து நொறுக்கி விட்டது. கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற பாஜ அனைத்து தந்திரத்தையும் பயன்படுத்தி பார்த்தது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. பாஜ.விடம் அரசு, அரசு நிறுவனங்கள் ஊடகங்கள் முழுவதும் உள்ளது. 10 மடங்கு பண பலம் இருக்கிறது. பாஜ.விடம் அனைத்தும் இருந்தும் காங்கிரஸ் அதனை அழித்து விட்டது. இதே போல், அடுத்தடுத்து வரவிருக்கும் தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கர்நாடகாவில் நடந்ததை போன்று பாஜ அழிக்கப்படும்.

இந்த தேர்தல்களில் பாஜ.வை தோற்கடிப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல. இந்திய மக்கள், மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களின் மக்கள் பாஜ.வை தோற்கடிக்க செய்வார்கள். சமூகத்தில் பாஜ பரப்பி வரும் வெறுப்பு கொள்கையினால் முன்னேற முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதால், இந்தாண்டு நடக்கவிருக்கும் பிற மாநிலத் தேர்தல்களிலும் பாஜ தோல்வி அடையும். கர்நாடகாவில் பாஜ, சமூகங்களிடையே வெறுப்பு, கோபத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியும் அதனை முயற்சித்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கர்நாடக மக்கள் இந்த தேர்தல் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் பற்றியது என்று நிரூபித்துள்ளனர்.பிற மதம், கலாசாரம், மக்கள், பெண்களை மதியுங்கள். இதுவே பாஜ.வை தோற்கடிக்க சிறந்த வழி. இது கடினமானதல்ல. இவ்வாறு ராகுல் கூறினார்.

* கொள்கை ரீதியான போர்

ராகுல் மேலும் கூறுகையில், “வரும் 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் பாஜ தோற்கடிக்கப்படும். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுவொரு கொள்கை ரீதியிலான போர். ஒருபுறம், வெறுப்பு பேச்சுகளால் நிறைந்த பாஜ.வின் பிரித்தாளும் கொள்கை, மறுபுறம் அன்பினாலான காங்கிரஸ் கட்சியின் கொள்கை,” என்று கூறினார்.

The post அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் மக்கள் பாஜ.வை தோல்வி அடைய செய்வார்கள்: அமெரிக்காவில் ராகுல் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: