பள்ளிகள் திறக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் கூட்டம் சென்னையை நோக்கி படையெடுப்பு: பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில் பஜார் வீதிகளில் நோட்டு, புத்தகம் எழுது பொருட்கள் விற்பனை நேற்று களைக்கட்டியது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து குழந்தைகளுடன் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கோடை விடுமுறையை கொண்டாடினர். இன்னும் சிலர் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர்.

இதனால், சுற்றுலா தலங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு களைக்கட்டி காணப்பட்டது. இந்நிலையில் மே மாதம் முழுவதும் விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு பள்ளி திறக்கும் தேதியை மாற்றி அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகள் திறக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதாவது தூத்துக்குடி, திருநெல்வேலி நாகர்கோவில், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை, சேலம், திருச்சி போன்ற பகுதிகளுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால், சென்னைக்கு வரும் பஸ்கள், விமானம், ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல்லாக இருந்து வருகிறது. நிறைய பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருகின்றனர். இதனால், கூடுதல் பணம் கொடுத்து தனியார் பஸ்களிலும் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சிரமமின்றி திரும்புவதற்கு வசதியாக தமிழக அரசின் போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர கூடுதலாக 500 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதேபோல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறைய பேர் நேற்று இரவு தங்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட தொடங்கினர். இதனால், நேற்று பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே போல கார் போன்ற வானங்களிலும் பயணத்தை தொடர்ந்த காட்சியை காண முடிந்தது. அதே போல சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை இன்றும், நாளையும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிகள் திறக்க நாளை ஒரு மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு தேவையான யூனிபார்ம் மற்றும் நோட்டு, புத்தகம் ஆகிய பொருட்களை வாங்க கடை வீதிகளுக்கு மக்கள் படையெடுத்தனர்.

இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை சென்னை தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான சீருடை, நோட்டு புத்தகம் வாங்குவதற்காக குவிந்தனர். இதனால், நேற்று மாலை வேளையில் பெற்றோர், குழந்தைகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் பள்ளிகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை விற்பனையும் அனைத்து பஜார் வீதிகளிலும் களைக்கட்டி காணப்பட்டது. கடந்த ஆண்டை விட பள்ளிகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் விலை அதிகமாக இருந்தது. இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர்.

The post பள்ளிகள் திறக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் கூட்டம் சென்னையை நோக்கி படையெடுப்பு: பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: