டூ வீலர்னா அதுல ரெண்டு பேரு தான் போகனும்: ஒன்றிய அரசு திட்டவட்டம்

திருவனந்தபுரம்: இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செல்ல அனுமதிப்பது விவேகமான செயல் அல்ல என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை தானாக கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்தை கண்காணிக்கும் பாதுகாப்பான கேரளா என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இதையடுத்து இருசக்கர வாகனங்களில் பெற்றோர்களுடன் ஒரு குழந்தையும் பயணிக்க அனுமதிக்க கேரள மாநிலத்துக்கு மட்டும் விதிவிலக்கு தரும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கோரி ஒன்றிய அரசை அணுகுவது குறித்து கேரள போக்குவரத்துத்துறை பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எளமரம் கரீம் “ஹெல்மெட் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கையுடன் 10 வயது வரையுள்ள குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் 3ம் நபராக ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடந்த மே 1ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அனுப்பியுள்ள கடிதத்தில், “உலகம் முழுவதும் இருசக்கர வாகனங்கள் என்பது இருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988ன்கீழ் எந்தவொரு இருசக்கர வாகனத்திலும் ஓட்டுநர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்ல அனுமதிக்க முடியாது. எனவே இருசக்கர வாகனத்தில் ஒட்டுநர் உள்பட 2 பேரை தவிர 3வது நபரை ஏற்றி செல்ல அனுமதிப்பது பாதுகாப்பான, புத்திசாலித்தனமான, விவேகமான செயலாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

The post டூ வீலர்னா அதுல ரெண்டு பேரு தான் போகனும்: ஒன்றிய அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: