மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி பலி

கோவை: மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி பலியானார். கோவை அடுத்த தொண்டாமுத்தூர் தென்னமநல்லூரை சேர்ந்தவர் அருண்குமார் (33). இவர் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள முனியப்பன் கோயில் வளாகத்தில் உள்ள அறையில் தங்கியிருந்து அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரை பார்ப்பதற்காக முருகானந்தன் என்பவர் அவரது அறைக்கு சென்றார். அப்போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால், உள்ளேயிருந்து கூச்சல் போடும் சத்தம் கேட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த முருகானந்தன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது, அருண்குமார் மின்சார சுவிட்சை ஆன் செய்தபோது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி பலி appeared first on Dinakaran.

Related Stories: