அக்னி நட்சத்திரம் முடிவுற்ற நிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்: விளை நிலங்களை உழுது தயார்படுத்தியுள்ளனர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், நிலக்கடலை, தட்டைபயிறு, உளுந்து மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென், வடகிழக்கு பருவமழை காலங்களிலும், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கோடை மழை இருக்கும்போதும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். சித்திரை, ஆடி, கார்த்திகை மற்றும் தைப்பட்டத்தில் அதிகளவு பயிர்சாகுபடி அதிகமாக இருக்கும்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை என தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. அதன்பின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிலநாட்கள் வடகிழக்கு பருவமழை பெய்தது. அதன்பின், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமானது. மேலும், கோடை வறட்சியால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிர் விதைப்பு செய்ய முடியாமல் தவித்தனர். ஏப்ரல் மாதம் மட்டும் சில நாட்கள் அவ்வப்போது கோடை மழை பெய்தது. கடந்த ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பல நாட்கள் கோடை மழை பெய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டில் கோடை மழை என்பது மிகவும் குறைவானது. இதனால், கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டிலும் இம்மாதம் (ஜூன்) தென்மேற்கு மழைப்பொழிவு இருக்கும் என்ற நம்பிகையில் விவசாயிகள் உள்ளனர்.

இதையொட்டி, பல்வேறு கிராமங்களில் காய்கறி சாகுபடி மேற்கொள்ள, விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களை உழுது தயார்படுத்தியுள்ளனர். கடந்த 4ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தருணத்தில், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே எழுந்துள்ளது. பொள்ளாச்சி மட்டுமின்றி, ஆனைமலை அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகளும் மானாவாரி பயிர் சாகுபடிக்கு செய்ய எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேல் பெய்த தென்மேற்கு பருவமழைபோன்று, இந்த முறையும் பருவமழை தொடர்ந்து பெய்யுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

The post அக்னி நட்சத்திரம் முடிவுற்ற நிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்: விளை நிலங்களை உழுது தயார்படுத்தியுள்ளனர் appeared first on Dinakaran.

Related Stories: