டைரக்டர் வீட்டிற்கு படையெடுத்த மலைப்பாம்புகள்: 18 குட்டிகளை பிடித்த வனத்துறையினர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் பிரபல சினிமா டைரக்டர் அல்போன்ஸ் புத்ரனின் வீட்டின் முன் 18 மலைப்பாம்பு குட்டிகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் மலையாளத்தில் நேரம், பிரேமம், கோல்டு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழில் ஆந்தாலஜி படமான அவியல் மற்றும் நேரம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அல்போன்ஸ் புத்ரனின் வீடு கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவாவில் உள்ளது. அவரது வீடு அருகே சில இடங்களில் புதர் மண்டி கிடக்கிறது.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரனின் வீட்டின் முன் திடீரென ஏராளமான மலைப்பாம்பு குட்டிகள் செல்வதை அந்த வழியாக சென்ற ஒரு நபர் பார்த்தார். அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மொத்தம் 18 மலைப்பாம்பு குட்டிகள் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன.

அவை அனைத்தையும் உடனடியாக அவர் லாவகமாக பிடித்தார். அல்போன்ஸ் புத்ரனின் வீட்டுக்கு அருகே குடிநீர் வடிகால் வாரியத்தினர் விட்டுச் சென்ற 2 பெரிய பைப்புகள் உள்ளன. அதன் உள்ளேயும் சில மலைப்பாம்பு குட்டிகளும், முட்டைகளும் காணப்பட்டன. அவற்றையும் வனத்துறையினர் பிடித்து சென்றனர். அந்த பகுதி நல்ல மறைவிடம் என்பதால் மலைப்பாம்பு அங்கே பதுங்கியிருந்து முட்டைகளை போட்டுள்ளது. எனவே தாய் பாம்பு அருகே எங்காவது இருக்க வாய்ப்புள்ளது. அதையும் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

The post டைரக்டர் வீட்டிற்கு படையெடுத்த மலைப்பாம்புகள்: 18 குட்டிகளை பிடித்த வனத்துறையினர் appeared first on Dinakaran.

Related Stories: