ஏரியில் மூழ்கி பலியான சிறுவர்கள் உடலுக்கு எம்எல்ஏ அஞ்சலி: தலா ரூ.10,000 நிதியுதவி

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி பலியான இரு பள்ளி சிறுவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அந்த குடும்பத்தினருக்கு நிதியுதவியை எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வயலூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல், தினேஷ்குமார், பிரசன்னா உட்பட 7 பேர் நேற்று முன்தினம் 29 ம் தேதி காலை வயலூர் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வெற்றிவேல்(15), தினேஷ்குமார்(14) இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து, சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவர்களை அப்பகுதியினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனால், நீண்ட நேரம் சேற்றில் சிக்கியதால் சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு போலீசார், உயிரிழந்த இரு சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின், அவர்களின் சொந்த கிராமமான வயலூரில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்த பள்ளி சிறுவர்கள் உடலுக்கு திருவள்ளுர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10,000 வீதம் நிதியுதவி வழங்கினார். இதற்கு முன்னதாக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்ட இரு சிறுவர்களின் உடலுக்கு அரசு சார்பாக மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் திருவள்ளுர் தாசில்தார் மதியழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5,000 வீதம் நிதி உதவி வழங்கினார். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உயிரிழந்த பள்ளி சிறுவர்கள் இருவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பத்திற்கு அரசு போதிய நிவாரண நிதி அளித்திட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

The post ஏரியில் மூழ்கி பலியான சிறுவர்கள் உடலுக்கு எம்எல்ஏ அஞ்சலி: தலா ரூ.10,000 நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: