2ம் கட்ட தேர்தலில் வெற்றி துருக்கி அதிபரானார் எர்டோகன்: உலக தலைவர்கள் வாழ்த்து

அங்காரா: துருக்கி நாட்டின் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த தயீப் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். துருக்கியில் கடந்த 2003ம் ஆண்டு முதல் தயீப் எர்டோகன் (69) தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அதிபர் தேர்தல் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்டது. இதில், எர்டோகனை எதிர்த்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கெமால் கிலிக்டரோக்லு போட்டியிட்டார். முதல் கட்ட தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 2ம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 99.43% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், எர்டோகன் 52.14 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கிலிக்டரோக்லு 47.86 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். மீண்டும் அதிபரானதைத் தொடர்ந்து தலைநகர் அங்காராவில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய எர்டோகன், ‘‘தேர்தல் தொடர்பான அனைத்து விவாதங்களையும் மோதல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நம் தேசத்தின் இலக்குகள் மற்றும் கனவுகளை எட்டிப்பிடிக்க ஒன்றுபடுவதற்கான நேரம் இது.

இந்த வெற்றி துருக்கியின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி. சமீபத்தில் துருக்கியில் 50 ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய பேரழிவு நிலநடுக்க பாதிப்புகளை சரி செய்வதிலும், பணவீக்கத்தை எதிர்த்து போராடுவதும் அரசின் முன்னுரிமையாக இருக்கும்’’ என்றார். வெற்றி பெற்ற எர்டோகனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் கத்தார், லிபியா, அல்ஜீரியா, ஹங்கேரி, ஈரான், பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post 2ம் கட்ட தேர்தலில் வெற்றி துருக்கி அதிபரானார் எர்டோகன்: உலக தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: