ஊட்டி, மே 27: குந்தா தாசில்தார் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழையை எதிர்க்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் உபகரணங்களை கலெக்டர் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தினால், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண்சாரிவை உடனடியாக சரி செய்யும் வகையில், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையின் மூலம் தயார் நிலையில் பேரிடர் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அம்ரித், குந்தா வட்டத்திற்குட்பட்ட மேல்குந்தா, இத்தலார், பாலகொலா, முள்ளிகூர் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும், கீழ்குந்தா, பிக்கட்டி ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில், மஞ்சூர் சாலை கெத்தை பகுதியிலும்,
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் பேரிடர் உபகரண பொருட்களான கடப்பாரை, மண்வெட்டி, கயிறு, பவர்ஷா இயந்திரம், ஒலி பெருக்கி, ஜேசிபி வாகனம், மணல் மூட்டைகள் ஆகியவற்றினை பார்வையிட்டார். இந்த பொருட்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து மேல் முகாம் பகுதியில் மஞ்சூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ‘குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டடத்தினை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது, குந்தா தாசில்தார் இந்திரா, ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலர் தரன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரவி (கீழ்குந்தா), செண்பகவள்ளி (பிக்கட்டி) உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
The post குந்தா தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் உபகரணங்களை கலெக்டர் பார்வை appeared first on Dinakaran.